ஆட்டோ டிரைவர் ஒருவர், குடி போதையில் சக ஆணுக்கு தாலிகட்டியதால், “நான் என் கணவருடன் தான் வாழ்வேன்” என்று அந்த ஆண், தாலி கட்டிய ஆணுடன் வாழ அடம் பிடித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், அவ்வப்போது அருகில் உள்ள டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று, தொடர்ந்து குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அப்போது, அந்த மதுபான கடைக்கு வழக்கமாக குடிக்க வரும் 21 வயதான இளைஞர் ஒருவருடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இப்படியான சூழலில் தான், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி குடிகாரர்கள் இருவரும், அங்குள்ள வழக்கமாக குடிக்கும் அந்த மதுபானகடையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இருவரும் ஆழ்ந்த குடிபோதையில் தத்தளித்த நிலையில், அவர்கள் இருவருமே “ஒரினச் சேர்க்கை திருமணம்” பற்றி பேசி இருக்கிறார்கள்.
இப்படியாக, அவர்கள் இருவரும் கடும் குடி போதையில் இருந்த நிலையில், அவர்கள் இருவருமாக அங்குள்ள ஜோகிநாத் கோயிலுக்கு சென்று உள்ளனர்.
அங்கு, அந்த 22 வயது ஆட்டோ டிரைவர், தனது சக குடிகார கூட்டாளியான 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து உள்ளார். அதன் பின்னர், அவர்கள் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் தான், தாலிகட்டிய அடுத்த நாட்களுக்குப் பிறகு, அங்குள்ள ஜோகிபேட் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சக ஆட்டோ டிரைவரானா தாலிகட்டிய அந்த 21 வயது இளைஞர் வந்து உள்ளார்.
அங்கு, ஆட்டோ டிரைவரின் பெற்றோரிடம் “உங்கள் மகனுக்கும், எனக்கும் திருமணம் நடந்துள்ளது” என்று கூறி, அந்த திருமணம் குறித்து அவர் விவரித்து உள்ளார்.
அத்துடன், “நான் என் கணவருடன் தான் வாழ்வேன்” என்று கூறி, தாலிகட்டிய அந்த 21 வயது இளைஞர் அடம் பிடித்து உள்ளார்.
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர், அந்த 21 வயது இளைஞருடன் சண்டை போட்டு அவரை வீட்டை விட்டு துரத்தி அடித்து உள்ளனர்.
இதனால், அந்த இளைஞர் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக இரு தரப்பினரையும் காவல் நிலையத்தில் அழைத்து வைத்து, போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சு வார்த்தையில், அந்த 21 வயது இளைஞர், “என்னை எனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்தி விட்டதால், எனக்கு வாழ வேறு வழியில்லை என்றும், இதனால் இனி நான் தனியாக வாழ ஒரு லட்சம் பணம் வேண்டும்” என்றும், கேட்டிருக்கிறார்.
அதன் பிறகு, அவர்கள் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி 10 ஆயிரம் பணத்தை கொடுத்து, ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை” என்று, எழுதி வாங்கிக்கொண்டு, போலீசார் அவர்களை தனித் தனியாக அனுப்பி வைத்தனர். இச்சம்வம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.