இஸ்லாமிய பெண்களுக்கு பொது வெளியில் பகிரங்கமாக பாலியல் மிரட்டல் விடுத்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர், 11 நாட்களுக்கு பிறகு தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்தியாவில் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற ஒரு பிம்பத்தை, வட மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது ஏற்படுத்தி வருவததுடன், இதனால் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய இறையாண்மையை கேள்விகுறியாக்கும் வகையில், கர்நாடகா மாநிலத்தில் “இஸ்லாமியர்களிடம் பொருள் வாங்காதீர்கள்” என்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிலர் திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

மேலும், கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வர அதிரடியாக தடை விதிக்கப்பட்ட நிலையில், முன்னதாக “கர்நாடகா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக” சில இந்து அமைப்பினர் குரல் எழுப்பிய நிலையில், “கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் ஸ்பீக்கர் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, அம்மாநில உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால், “300 க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக” கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நேற்றைய தினம் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, இஸ்லாமிய மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தும் விதமாக, “இந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வோம்” என்று, உத்தரப் பிரதேச மாநிலம் சாமியார் ஒருவர் கடந்த 2 ஆம் தேதி பகிரங்கமாகவே மிரட்டில் விடுத்தார்.

இது தொடர்பாக, உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் கடந்தகடந்த 2 ஆம் தேதி இந்து மத சாமியார் பஜ்ரங் முனி தாஸ், ஜீப்பில் இருந்தபடியே பொது மக்கள் இடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அந்த சாமியார் சென்ற ஜீப்பானது, அங்குள்ள சீதாபூரில் இருக்கும் மசூதிக்கு அருகில் சென்று உள்ளது. அப்போது, “இந்தப் பகுதியில் எந்த இந்து பெண்களுக்காவது இஸ்லாமிய தொல்லை கொடுத்தால், இஸ்லாமிய பெண்களை நாங்கள் கடத்திச் சென்று பொது வெளியில் வைத்து அவர்களை பாலியல் வன்புணர்வு செய்வோம்” என்று, மிகவும் பகிரங்கமாக மசூதியின் அருகில் நின்று சாமியார் பஜ்ரங் முனி தாஸ் மிரட்டல் விடுத்தார்.

அந்த சாமியார், இப்படியாக இஸ்லாமிய பெண்களுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததும், அங்கிருந்த பெரும்பாலான மக்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று, கோஷமிட்டு உள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமான சூழலும் ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் உடனடியாக அங்கு தலையிட்டு, அங்குள்ள பதற்றமான நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தான், அமைதியாக இருக்கும் இந்தியாவில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய அந்த சாமியார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, “அல்ட் நியூஸ்” என்ற செய்தி வலைதளத்தின் துணை நிறுவனர் முகமது ஜுபைர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால், அந்த சாமியார் மீது கடந்த 10 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த சாமியார் பேசிய வீடியோவை முகமது ஜூபைர் அப்போதே சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதன் காரணமாக, இந்த வீடியோவானது இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த சாமியாரின் திமிரான பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

மேலும், “அந்த சாமியார் பேசிய வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், சாமியார் பேசியது உண்மை என்று தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், சீதாபூர் போலீஸார் அப்போது விளக்கம் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, தேசிய பெண்கள் ஆணையம் பஜ்ரங் முனி தாஸின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தி வந்தது.

அதன் தொடர்ச்சியாக, அந்த சாமியார் பஜ்ரங் முனி தாஸின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரை முன்னதாக கைது செய்துள்ளனர்.

குறிப்பாக, தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும், தான் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அந்த சாமியர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பேசி உள்ள சாமியார் பஜ்ரங் முனி தாஸ், “நான் பேசியது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும், அதில் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்பதாகவும்” அந்த சாமியார் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். எனினும் போலீசார் அவரை 11 நாட்களுக்குப் பிறகு தற்போது கைது செய்து உள்ளனர்.