ரயில் பயணத்தில் அமர்வதற்கு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது திருவள்ளூர் நீதிமன்றம். 25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இது கடந்த 1996-ம் ஆண்டில் சென்னையிலிருந்து கோவைக்கு காவலர் பயிற்சிக்காக செல்ல சேரன் விரைவு ரயிலில் ஐந்து சிஆர்பிஎஃப் காவலர்கள் சாதாரண வகுப்பில் ஏறி இருக்கிறார்கள். அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் இருக்கையில் அமர்வதற்காக காவலர்கள் முயற்சித்துள்ளார்கள்.

இந்நிலையில் அங்கு காவலர்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஏ.சி.தாஸ் என்கிற சிஆர்பிஎஃப் காவலர், பயிற்சிக்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து ஒருவர் மீது சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் ராஜா என்பதும், அவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இச்சம்பவம் நடந்த பகுதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கடம்பத்தூர் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கை கடம்பத்தூர் காவல்துறைக்கு மாற்றப்பட்டது. மேலும் இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் முதலாம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

மேலும் துப்பாக்கியால் சுட்ட, இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் சிஆர்பிஎஃப் காவலர் ஏ.சி.தாஸ் ராஜாவை துப்பாக்கியால் சுட்டது நிரூபிக்கப்பட்டடால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி. மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அந்த அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.