திருச்சி என்ஐடியில் காதல் விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே என்.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில் நுட்பக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பான்குடி பகுதியை சேர்ந்த சவுமியா தேவி வயது 20, என்பவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.டெக். சிவில் என்ஜினீயரிங் இராண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சவுமியா தேவி ஒரு தேசிய அளவிலான தடகள வீராங்கனை. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நேற்றைய தினம் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் அவரது தோழியான தீட்சனா வெளியில் சென்றிருந்தார். சவுமியா தேவி மட்டும் விடுதி அறையில் தங்கியிருந்தார். இதற்கிடையே வெளியில் சென்றிருந்த தீட்சனா இரவு விடுதி அறைக்கு திரும்பியபோது, அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து ஊழியர்கள் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அறையின் உள்புறம் உள்ள மின் விசிறியில் சவுமியா தேவி தூக்கில் சடலமாக தொங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்து தீட்சனா அலறினார். மேலும் இதுதொடர்பாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.