மனைவியின் கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜ சூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் ஹோசிமின் வயது 32. இவர் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இதனால் தனது குடும்பத்துடன் காட்டுமன்னார்கோவில் தியாகராஜபிள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவரும் சிதம்பரம் எம்.கே. தோட்டத்தை சேர்ந்த பரமானந்தம் மகன் சுந்தரபாண்டியன் வயது 38, இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சுந்தரபாண்டியன் திருமணமாகாதவர் ஆவார். இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் தனியார் குளிர்பான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சுந்தரபாண்டியன் அடிக்கடி ஹோசிமின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஹோசிமின்னின் மனைவி தெய்வ லட்சுமியுடன் சுந்தரபாண்டியனுக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

மேலும் இது பற்றி அறிந்த ஹோசிமின் சுந்தரபாண்டியனை கண்டித்தார். இருப்பினும் அவர் தெய்வலட்சுமியுடன் பழகுவதை நிறுத்தி கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி சுந்தரபாண்டியனை தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டுக்கு ஹோசிமின் அழைத்து சென்றார். அங்கு இவரும் மது குடித்தனர். அப்போது, ஹோசிமின் சுந்தரபாண்டியனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அதனைத்தொடர்ந்து இது குறித்து சுந்தரபாண்டியனின் அண்ணன் நேதாஜி, காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குப்பதிவு செய்து ஹோசிமின்னை கைது செய்தனர். இது தெடர்பான வழக்கு விசாரணை சிதம்பரம் நீதிமன்றம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார். அதில், ஹோசிமினுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செம்மல் தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகர் ஆஜரானார்.