சாலையில் எச்சில் துப்பிய கண்டெக்டரை சரமாரியாக தாக்கிய போலீசார், அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அரசுப் பேருந்தின் நடத்துனர் தாக்கப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
அதாவது, சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜூஸ் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஜூஸ் கடையில் இன்று காலை ஒருவர் ஜூஸ் குடித்துக்கொண்டிருக்கும் போது, அவர் கீழே எச்சில் துப்பி உள்ளார்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு போலீசார் மீது அந்த எச்சில் பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த போலீசார், கடும் கோபம் அடைந்து, அந்த நபரை அந்த பொது இடத்தில் வைத்தே மிக கடுமையாக தாக்கி உள்ளார்.
போலீசார் தாக்கியதில், அந்த நபரின் முகம் எல்லாம் வீங்கிய நிலையில், அவருக்கு முகத்தில் இருந்து ரத்தம் வந்து உள்ளது.
இந்த சம்பவத்தை, அங்கு நேரில் பார்த்த பொது மக்கள் அங்கு திரண்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அந்த போலீசாரின் செயலை வீடியோக எடுத்து வைத்துக்கொண்டு, அவசர உதவி எண் 100 க்கும் போன் செய்து, புகார் அளித்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் அங்கு விரைந்து வந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட அந்த போலீசாரை பிடித்து சைதாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், காயம் அடைந்த அந்த நபரை மீட்டு பொது மக்கள், அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக பாதிக்கப்பட்ட அந்த நபர், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது, போலீசார் விசாரித்த நிலையில், “தாக்குதலுக்கு உள்ளான நபரின் பெயர் பாலச்சந்திரன் என்பதும், அவர் அயனாவரம் பேருந்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வருவதும்” தெரிய வந்தது.
அத்துடன், “பாலச்சந்திரனை கடுமையாக தாக்கிய போலீசாரின் பெயர் லூயிஸ் என்பதும், இவர் சைதாபேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருவதாகவும்” போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சைதாப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தான், அரசுப் பேருந்து கண்டெக்டரை தாக்கிய சைதாப்பேட்டை போலீசார் லூயிஸ், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.
இதனிடையே, இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக சென்னை உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், “போலீசான லூயிஸ் தவறு செய்தது உறுதியானால், அவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்” என்று, சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.