கோவிட் - 19 கொரோனா வைரஸின் பாதிப்பு, ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதை காணும்போது அனைவருக்கும் கூடவே ஒருவித பயம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. இன்றைய தேதிக்கு, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். இந்தியாவில் என்றில்லை, உலகம் முழுக்கவே மோசமான நிலையே நிலவிவருகின்றது.
அதில் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, தினமும் மிகவும் மோசமாகிக் கொண்டே போகின்றது. இதுவரை ஒன்றரை லட்சம் உயிர்களை இழந்துவிட்டது அமெரிக்கா. இன்னும் 20 நாள்களில், மேற்கொண்டு 20,000 பேர் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உயிரிழப்பர் என கணித்துள்ளது அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸின் வீரியம் குறித்து உலக சுகாதார நிறுவனத்தினர் பேசுவருகின்றார். மிகமுக்கியமானதாக, கருதப்படும் இவர்களின் கருத்து பல்வேறு விமர்சனங்களையும் பெறும்.
இதுவரை இவர்கள் பேசியவற்றில், ``மிக மிக மோசமான பாதிப்புகள் வரும் நாள்களில் ஏற்படும்" என்று கூறியிருந்தது, மிக முக்கியமான கருத்தாக பார்க்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக, நேற்றைய தினம் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் பேசியிருந்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது. அவர் பேசுகையில்,
``உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பல முயற்சிகள் மூன்றாம் கட்ட பரிசோதனை (கிளினிகல் ட்ரையல் எனப்படும் மனிதர்களுக்குத் தந்து மேற்கொள்ளும் சோதனை) கட்டத்தில் உள்ளன.
நல்ல பலனைத் தரும் பல தடுப்பு மருந்துகள் வந்து சேரும் என்ற நம்பிக்கை. ஆனாலும், முழு தீர்வைத்தரும் மருந்து கண்டறியப்படும் மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" என்றார். இதை அவர், ``However, there's no silver bullet at the moment and there might never be" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
silver bullet என்ற சொல்லுக்கான நேரடி விளக்கம், மாயாஜாலம் போல தீர்வை அளிக்க வல்லது என்பதாகும்.
ஆங்கில கதைகளில், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டு மாய என்றொன்று சொல்லப்படும். இப்படியான துப்பாக்கிகள் மோசமான ஓநாய், ரத்தக்காட்டேரி, பூதங்கள் போன்ற எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்த வல்லது என்ற குறிப்புகள் இருக்கும்.
ஆகவே `சில்வர் புல்லட் போன்ற ஒன்று கிடைக்காமலே போகும்' என்ற உலக சுகாதார நிறுவனத்தினர் கூறியிருந்தது, `கொரோனாவை போட்டவுடன் சரி செய்யும் மருந்து ஒன்று இதுவரை இல்லை, இனியும் வராமல் போகலாம்' என்பதுதான் டெட்ரோஸ் கூறியதன் பொருள் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.
இருப்பினும் மாயாஜாலத் தீர்வு என்று அதேனாம் கூறுவது, `தடுப்பு மருந்தா அல்லது குணப்படுத்தும் மருந்தா' என்பது தெரியவில்லை. ஒருவேளை, குணப்படுத்தும் மருந்துகளைதான் அதேனாம் கூறியிருப்பார் என்றால், தடுப்பு மருந்து வருவதற்கான சாத்தியம் இருக்கிறது எனக்கூறப்படுகிறது. தடுப்பு மருந்தே கிடைக்காது என அதேனாம் குறிப்பிட்டிருந்தால், பிரச்னை மிக மோசமான நிலையை எட்டக்கூடும்.
எது எப்படியோ, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, இப்போதைக்கு நிறைய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அதேபோல, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகிய நடைமுறைகளை அரசுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்த வைரஸை எதிர்க்க அரசுகள் முயல வேண்டும். அதேனாம் தன்னுடைய பேச்சில், `தனிமனிதர்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது, பாதுகாப்பாக இருமுவது' ஆகிய நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடுகள் தங்கள் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.