உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 (Sputnik V) என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷியா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ``உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உலகை அதிர வைத்தார். ஆனால் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை அந்த நாடு வெளியிடாதது, உலக நாடுகளை சந்தேகப்பார்வை பார்க்க வைத்தது. தடுப்பூசி விஷயத்தில் ரஷ்யா அவசரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் ரஷ்யா எந்த விமர்சனத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, ``கொரோனா தடுப்பூசி உற்பத்தி அடுத்த 2 வாரங்களில் தொடங்கும்" என கூறி மேலும் பரபரக்க வைத்தார். அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் ஆதாரமற்றவை எனக்கூறி, அவரே அதை நிராகரித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளின் வா்த்தகரீதியிலான உற்பத்தி தொடங்கப்பட்டுவிட்டதாக அந்த நாட்டின் ‘இன்டா்ஃபாக்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷிய சுகாதாரத் துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அந்த செய்தி நிறுவனம் சனிக்கிழமை கூறியுள்ளதாவது:
``ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு, சோதனைகளில் வெற்றிகரமாக செயல்பட்ட கொரோனா தடுப்பூசியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பெருமளவில் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. கேமாலேயா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உலகிலேயே முதல் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, இந்த மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்"
இவ்வாறு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ரஷ்யா தனது தடுப்பூசியை 40 தன்னாா்வலா்களுக்கு மட்டுமே செலுத்தி சோதித்தது என்ற விமர்சனமும் எழுந்துவந்தது. உலக சுகாதார அமைப்போ, தடுப்பு மருந்துகளின் இரண்டாம் கட்ட சோதனையில் குறைந்தது 100 பேராவது ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும், 3-ஆம் கட்ட சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு அந்த மருந்து சோதனை முறையில் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள தகவல்களை வைத்துப் பாா்த்தால், அவா்கள் தயாரித்துள்ள மருந்து முதல் கட்ட சோதனையை மட்டுமே தாண்டியிருக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா். மேலும் பல தரப்பிலும் இருந்தும், `ரஷ்யா்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து அபார சக்தி படைத்ததாகவே இருந்தாலும், அது மனிதா்களுக்கு பாதுகாப்பானது என்றோ, அது கொரோனாவிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றோ உடனடியாக முடிவுக்கு வர முடியாது' என்று கூறப்பட்டு வந்தது.
சர்ச்சைகள் வலுத்து வந்த நிலையில், தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்காகத் தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதிபா் புதின் கடந்த புதன்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.
அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ நேற்றைய தினம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ``உலகின் முதல் கொரோனா தடுப்பூசி பற்றிய விமர்சனங்கள், பெரும்பாலும் சோதனைகள் பற்றிய தகவல்கள் இல்லாததால் வெளியானவை ஆகும். ஏற்கனவே 6 தடுப்பூசிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மேடையில்தான் எங்கள் தடுப்பூசி பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அல்ல. வரும் நாட்களில், அநேகமாக திங்கட்கிழமையன்று எங்கள் தடுப்பூசியின் முன் மருத்துவ மற்றும் மருத்துவ பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்" என்று தெரித்திருந்தார்.
இதற்கிடையில், வியட்நாம் ரஷ்ய COVID-19 தடுப்பூசி வாங்க பதிவு செய்துள்ளது. 20 நாடுகள் "ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி" வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல ஐந்து நாடுகளில் ஆண்டுக்கு 500 மில்லியன் தடுப்பூசி டோஸ் தயாரிக்க மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, Sputnik V தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய கேமாலேயா ஆய்வு மையம் மற்றும் பின்னோஃபாா்ம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் மிகயீல் முராஷ்கோ தெரிவித்தாா். இந்த நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பெருமளவில் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன. அதற்கு முன் மருத்துவர்களுக்கு தருவதற்கான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனவாம்