இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. இதைப்போல பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

அதேநேரம் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதேபோல், 50,129- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 64 ஆயிரத்து 811-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 578- பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 534- ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 10 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 469 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 11 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு விவரம்:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 50,129 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,68,511 ஆக அதிகரித்துள்ளது.

24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 578 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 62,077 ஆகவும் அதிகரித்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 70,78,123. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6,68,154 மட்டும். மாநிலங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரான்ஸுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்திலும் பிரேசில் 3-வது இடத்திலும் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலியில் மீண்டும் கொரோனா 2-வது அலை தாக்கம் நீடித்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று ஒரு நாளில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் 24ஆம் தேதி 2,865 ஆக இருந்த பாதிப்பு, சரியாக 4 மாதங்களுக்கு பின் மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.95 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 4,024 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 31,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.