இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 9.5 லட்சத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. விரைவில், ஒரு மில்லியன் என்ற எண்ணிக்கையையும் அது அடையலாம். இதற்கிடையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், கர்நாடகா மிக முக்கியமானதாக இருக்கின்றது.
அந்தவகையில் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 3,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை அங்கு 47,253 ஆக அதிகரித்து இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கான பட்டியலில் 4வது இடத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவின் பெங்களூருவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,975 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பெங்களூர் நகரில் கொரோனா வைரஸ் காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 437. தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இம்மாதம் 22ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இன்னும் இரு மாதங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் இன்னும் அதிகரிக்கும். நம்மை யார் காப்பாற்றுவது எனத் தெரியவில்லை. இனி கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்,' எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில்,
``உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், இந்த வைரஸ் பாகுபாடு காட்டாது. அடுத்த இரண்டு மாதங்களில் மட்டுமே கொரோனா பாதிப்புகள் உயரும் என நான் நம்புகிறேன். கொரோனாவில் இருந்து கடவுளால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்" என சொல்லியிருக்கிறார்.
மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சரேவும், கொரோனா விஷயத்தில் இப்படிப் பேசியிருப்பது, அம்மாநில மக்களிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அம்மாநிலத்தின் காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கிருஷ்ண பைரே கவுடா கூறுகையில், ``ஸ்ரீராமுலு கருத்தைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு மேல் இந்த அரசு எதற்காக இருக்க வேண்டும்? பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குச் செல்லட்டும். நிலைமை கைமீறிப் போய்விட்டது. மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லாமல், மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல், முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்றிருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மிகவும் அருமையாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வரக்கூடிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்ததது கர்நாடகா. அதிலும் பெரு நகரங்களில் பெங்களூர் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டுக்களைப் பெற்றது. நோயாளி எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, ஃப்ளாட்டனிங் தி கர்வ்-ல் சிறப்பாகச் செயல்பட்டதாகச் சொல்லப்பட்டது பெங்களூருதான். ஊரடங்கு காலம் தளர்வுப்படுத்தற்குப் பிறகு, பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதுதான் எண்ணிக்கை உயர்வுக்கு, மிகப்பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரியான முன்னேற்பாடு இல்லாத ஊரடங்கு தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதன், விளைவைச் சந்தித்துள்ள காரணத்தினால் இப்போது விளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் அம்மாநிலத்தவர்கள். அதன் ஒருபகுதியாக ஜூலை 22 - ம் தேதிக்குள் சுமார் 200 ஆம்புலன்ஸ்களைத் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இன்னும் இந்த தேதிக்கு சில தினங்களே இருப்பதால், இது நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.
இதுவொரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் கர்நாடகாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சருமான அசோகா ஆகிய 3 அமைச்சர்கள் இடையே அதிகார போட்டி நிலவியிருப்பதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் சொல்லியிருந்தன. கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் இதுபற்றி பத்திரிகையாளகர்களிட்டம் கூறுகையில், ``அமைச்சர்கள் இடையே நடைபெற்ற அதிகார மோதல்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக, பெங்களூருக்கு மட்டும், 7 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பணிகளில் நாங்கள் யாராவது குறுக்கிட்டோமா? அப்படி இருந்தும் பெங்களூர் நிலைமை இப்படிப் போனதற்கு வேறு யார் பொறுப்பேற்க முடியும்?" எனக்கூறியிருக்கிறார்.
இதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதிலும், பெரும் கூட்டங்களில் பங்கேற்பது, கூட்டம் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்திருக்கிறார் ஶ்ரீராமுலு. இப்படியான அரசியல் போட்டிகள், இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிக்கல் மிகப்பெரியது என்றே சொல்ல வேண்டியுள்ளது.
ஆனால் சூழல் சிக்கலுக்குள்ளானதும், அதற்குக் காரணமானவர்கள் விலகிக் கொள்வது, வேடிக்கையான உண்மை!
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கொரோனா அச்சம் காரணமாக இப்போது தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலிருந்தே பணி புரிவது, கவனிக்கத்தக்க விஷயம். முதல்வர் தொடங்கி, அமைச்சர் வரை கர்நாடக அரசியலே ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது!
- ஜெ.நிவேதா