உலகளவில், ஏறத்தாழ 150 கோவிட் - 19 கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், சரியான மற்றும் முழுமையான தடுப்பு மருந்து 2021- ல் தான் வழக்கத்துக்கு வரும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார் தமிழரும், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னணி ஆய்வாளருமான சௌமியா சுவாமிநாதன். அடுத்த வருடத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகூட கிடைக்கலாம் என நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார் அவர்.
இப்போது ஆய்விலிருக்கும் அனைத்து நிறுவனங்களோடும் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்கள் தொடர்பிலிருப்பதாகவும், அவர்கள் மூலமாக தடுப்பு மருந்து பணி எங்கு முதலில் நிறைவடைகிறதென அறிந்து, உடனடியாக அந்த தடுப்பு மருந்து உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தாங்கள் செய்யவிருப்பதாக கூறியிருக்கிறார் சௌமியா. இப்போதைக்கு, ஆக்ஸ்ஃபோர்ட்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தயாரித்துவரும் தடுப்பு மருந்துதான், முன்னனியில் இருப்பதாக சொல்லியிருக்கிறார் சௌமியா. இந்த ஆய்வாளர்கள், இப்போது ஃபேஸ் - 3 அதாவது மூன்றாவது நிலை ஆய்வில் இருக்கிறது.
தடுப்பூசியில், மூன்று நிலைகள் முக்கியமானதாக இருக்கும். அவை, விலங்குகளுக்கு ஆய்வு செய்தல் - மனிதர்களுக்கு ஆய்வு செய்தல் - மருத்துவ சிகிச்சையிலிருப்போருக்கு ஆய்வு செய்தல். இதில், சௌமியா சுவாமிநாதன் குறிப்பிட்ட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினர், மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலைதான், இருப்பதிலேயே அதிக சவாலானதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களின் உடலை பரிசோதனிக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும். அத்தனை பேரை ஒன்றிணைத்து, அவர்களை சரியாக கவனித்துக்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்குமென சொல்லப்படுகிறது.
இந்தியா இந்த ஆய்வில் இரண்டாவது கட்டத்தில் உள்ளது. அதில், மனிதர் யாராவதொருவர் மீது செலுத்தப்பட்டு, ஆராயப்படும். இதற்கும், மூன்றாவது நிலை போல தன்னார்வலரொருவர் தேவை. இருப்பினும், அந்த அளவுக்கு அதிகமானோர் வேண்டாம். இந்தியா, இப்போதைக்கு தனது இந்த மனிதர் மீதான ஆய்வை, ஆகஸ்டு 15 - ல் செய்யப்போகிறோம் என அறிவித்துள்ளது. அவருக்கு மருந்தளித்து, ஆறு வாரத்துக்கு அவரின் உடலில் மருந்தின் செயல்பாடுகளை அறிஞர்கள் ஆராய்வர். சற்றே நீண்ட காலத்துக்கான பயிற்சியாக இது இருக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட தன்னார்வலரின் உடல்நலம் மீது ஆய்வாளர்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டுமென சொல்லி எச்சரித்துள்ளார் சௌமியா சுவாமிநாதன்.
அதேபோல தடுப்பு மருந்து வரும்வரை, நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக் கொள்வதிலும் கவனம் தேவையென சொல்லப்படுகிறது என்பதால், `இடைப்பட்ட காலத்தில், ஹைட்ராக்ஸி க்ளோரோக்யுனைன் அல்லது ஹெச்.ஐ.வி.க்கான மருந்து போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்' என சொல்லி இருக்கிறார் சௌமியா சுவாமிநாதன்.
கொரோனாவுக்கான சிகிச்சையில், ஓரளவு பயன்படுத்தும் மருந்தாக இப்போதைக்கு உலகளவில் சொல்லப்படும் ரெம்டெசிவர்தான். இந்த ரெம்டெசிவரும், இறப்புக்கான வாய்ப்பைக் குறைக்குமா என்பது சந்தேத்துக்கு உட்பட்டே இருக்கிறது. இருப்பினும், நோயை விரைந்து குணப்படுத்த உதவுவதால், உலக சுகாதார நிறுவனத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதே போல ஃபேவிபிரவியர் (Favipiravir) என்ற மருந்தும் கொரோனா சிகிச்சைக்கு பயன்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு பக்கவிளைவுகள் இருக்குமென்பதால், மருத்துவர்களேவும் கவனமாக இருக்க வேண்டுமென சொல்லப்படுகிறது.
இப்போதைக்கு, பல நாடுகளிலும் ஒவ்வொரு நாளும் நோயாளிகள் எண்ணிக்கை அளவுக்கதிகமாகிக் கொண்டே இருப்பதால், இறப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாக சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். இறந்த நோயாளிகளைப் பொறுத்தவரை, பலரின் இறப்பு பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பல இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை என தாங்கள் நம்புவதாக, சௌமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இன்னும் மேற்கொண்டு பல மாதங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அதன்பின்னர் இறப்பு எண்ணிக்கையை பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியும் என்பது, அவரின் கூற்று.
உலகளவில் கொரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில், இந்தியாவுக்குத்தான் மூன்றாவது இடம். 7.23 லட்சம் நோயாளிகள் பதிவாகி, 20,000 இறப்புகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்துதான், இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவென சொல்லி வருகிறார்கள் மத்திய அரசினர். அப்படியிருக்கும்போது இறப்புகள் பதிவாகவில்லை என உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த, இந்திய விஞ்ஞானி ஒருவரே சொல்லியிருப்பது இந்திய மருத்துவ உலகில், மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது.
- ஜெ.நிவேதா