இந்தியாவில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, கோவிட் 19 கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்தம் 27,02,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 876 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 19,77,780 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,73,166 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 73.2 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு எனக் கருதப்படும் 'D614G' வகை பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இதுவரை அறியப்பட்டு வந்த கோவிட்-19 வைரஸின் திரிபுகளைக் காட்டிலும், இந்த D614G என்ற திரிபு வகை தொற்று, பத்து மடங்கு வேகமாகப் பரவும் என்று மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். எனவே மலேசியாவில் அனைவரும் கூடுதல் கவனத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தி உள்ளார்.
அண்மையில் இந்தியாவில் தமிழகத்தின் சிவகங்கை பகுதியிலிருந்து மலேசியா திரும்பிய ஒருவருக்குத்தான், இந்த D614G என்ற வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா திரிபு பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவில்தான், அவருக்கு D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
இந்த நிலையில், மலேசியாவின் உலுதிராம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இதேபோன்ற பாதிப்பு இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறும்போது,
"இந்த வகை தொற்று பத்து மடங்கு வேகமாகவும் மிக எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவும். ஒரு தனி நபரிடம் இருந்து அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று பரவினால் அவர் 'சூப்பர் ஸ்பிரெட்டர்' (Super Spreader)" எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த புதிய வகை திரிபான D614G வகை பிறழ்வுடன் கூடிய கொரோனா கிருமித் திரிபு கடந்த ஜூலை மாதம் தான் முதன்முதலில் தெரிய வந்தது. ஆகவே தற்போது கண்டறியப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளால் இந்த புது வகை பாதிப்பை தடுக்க முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
"பொதுமக்கள் சமூக இடைவெளியே கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மலேசியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது" என்று அங்குள்ள ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் எகிப்திலும் பாகிஸ்தானிலும் இந்த வகைத் தொற்றுப் பரவல் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது மலேசியாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மலேசியாவில் 9,000 த்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 8,500 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துவிட்டதால், அங்கு பிரச்னை கட்டுக்குள் உள்ளது என அரசு நம்புகிறது.
இறப்பு எண்ணிக்கையும், மலேசியாவில் மிகக்குறைவாக இருப்பதால், சூழலை எளிதாக கையாளலாம் என மலேசிய அரசு முழுமையாக் நம்புகிறது.